Monday 30 March 2009 | By: Menaga Sathia

அஜுரணத்தை அகற்ற....

* சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

*கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

*2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

*2 தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

*2 வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

*சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

*ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

கிள்ளு மிளகாய் சாம்பார்


தே.பொருட்கள்:

துவரம்பருப்பு - 1கப்
புளி - 1 எலுமிச்சைபழ அளவு
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பருப்பை லேசாக வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் அத்துடன் மஞ்சள்தூள்,உரித்த பூண்டுப்பல் சேர்த்து சரியான அளவு நீர் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.பச்சைமிளகாயை நீளவாக்கில் அரியவும்.காய்ந்த மிளகாயை கிள்ளிவைக்கவும்.

*புளியை 1/2 கோப்பையளவு நீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*5நிமிடம் கொதித்ததும் வெந்தபருப்பை சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

எனக்கு சாம்பார் மட்டும் இருந்தாலே போதும்.இதற்க்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய்,அப்பளம்,வறுவல் வகைகள் அனைத்தும் சூப்பரா இருக்கும்.என் அம்மா செய்யும் சாம்பார் வகையில் இதுவும் ஒன்று.
Friday 27 March 2009 | By: Menaga Sathia

கோதுமை ரவை உப்புமா / Cracked Wheat Rava Upma



தே.பொருட்கள்:

கோதுமைரவை - 2 கப்
வெங்காயம் - 1 சிறியது
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு+உ.பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 3

செய்முறை:


* ரவையை வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுக்கவும்.

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் 1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் அளவுக்கு,4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

*நன்கு கொதித்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறவும்.

*தண்ணீர் நன்கு வற்றி வரும் போது தேங்காய்துறுவலைப் போட்டு கிளறி மூடி போட்டு அடுப்பை அணைக்கவும்.

*10நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் உப்புமா நன்கு பொலபொலவென இருக்கும்.

பி.கு:
இந்த உப்புமாவிற்கு வெங்காயமும்,தேங்காயும் அதிகமா இருந்தால் இன்னும் சுவையா இருக்கும்.இதர்க்கு தொட்டுக் கொள்ள சின்ன வெங்காய காரசட்னி சூப்பராயிருக்கும்.எனக்கு மிகவும் பிடித்த உப்பமா இது.
Tuesday 24 March 2009 | By: Menaga Sathia

முள்ளங்கி சப்பாத்தி / Radish Chappathi


தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
சிறிய வெள்ளை முள்ளங்கி - 1
உப்பு+எண்ணெய் - தே.அளவு
நெய் - 1 டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா - 1/4 தேக்கரண்டி.
கொத்தமல்லித் தழை - சிறிது.

செய்முறை:

*முள்ளங்கியை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.அதை நெய்விட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

*மாவு+உப்பு+தூள்வகைகள்+முள்ளங்கி+கொத்தமல்லித் தழை அனைத்தும் ஒன்றாக கலந்து தண்ணிர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*1 மணிநேரம் நன்கு ஊறியதும் சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.

*சாம்பார்,குருமாவுடன் சூடாக பரிமாறவும்.

*சர்க்கரை நோயாளிகளுக்கு முள்ளங்கி சப்பாத்தி மிகவும் நல்லது.
Sunday 22 March 2009 | By: Menaga Sathia

டிப்ஸ் டிப்ஸ்

* ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.

* பனீர் எடுக்கும் போது அத்தண்ணீர்(whey water) வே வாட்டர் என்று சொல்வார்கள்.வீணாக்கமால் அத்தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசையலாம்,பால் உறை ஊற்ற பயன்படுத்தலாம்,மீண்டும் அந்த நீரையே பனீர் எடுக்க பயன்படுத்தலாம்.

*முளைக்கீரையை பின்புறமாகத் திருப்பிப் பார்த்தால் ரோஸ் நிறமாக இருக்க வேண்டும்.அந்த ரோஸ் நிறம் தான் தங்கசத்து,நல்ல கீரையுமாகும்.

*மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.

*தினமும் 8,9 கறிவேப்பிலை துணுக்குகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும்.

*இட்லிப்பொடி அரைக்கும்போது,கடைசியில் 1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தால் பொடி சூப்பரா இருக்கும்.

*பிரிட்ஜில் முட்டைகளுக்கு பக்கத்தில் எலுமிச்சைப் பழம் வைக்ககூடாது,முட்டை சீக்கிரம் கெட்டுவிடும்.

*பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும்.
Thursday 19 March 2009 | By: Menaga Sathia

எலுமிச்சை ஊறுகாய்



எனக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பாடே பிடிக்காது.அதுவும் எங்க அம்மா போடுகிற ஊறுகாய் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.எங்கம்மா செய்யும் முறையில் நான் போட்ட ஊறுகாய்.

தே.பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 10
காய்ந்த மிளகாய் - 100 கிராம்
உப்பு - 10 டேபிள்ஸ்பூன்[ரொம்ப கரிக்கனும்,குறைவாக இருந்தால் அதிகமாக போடவும்]
நல்லெண்ணெய் - 100 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 10[கீறவும்]
இஞ்சி - சிறு துண்டு[பொடியாக கட் செய்யவும்]

செய்முறை:

* பழத்தை கழுவித் 4 காக கட்செய்யவும்.

*உப்பை லேசாக வெறும் கடாயில் வதக்கவும்.[அப்போ தான் ஊறுகாய் மேலே வெள்ளையாக இல்லாமல் இருக்கும்,நீண்ட நாள் கெடாது].

*பிளாஸ்டிக்,கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடியில் கட் செய்த பழத்தை போட்டு அதுல் ஒரு சில கட் செய்த பழத்தை பிழியவும்.வருத்த உப்பு போட்டு லேசாக குலுக்கவும்.பச்சைமிளகாய் ,இஞ்சி போட்டு தினமும் குலுக்கி விடவும்.

* 10 அல்லது 15 நாட்கள் ஊறியதும் தாளிக்கலாம்.

*எண்ணெயை காயவைத்து ஆறவிடவும்.

*கடுகு+வெந்தயம் வெறும்கடாயில் லேசாக வறுக்கவும்.

*பின் மிளகாய் +கடுகு+வெந்தயம் மிக்ஸியில் அரைக்கவும்.[மிளகாயை வறுக்ககூடாது]

*அரைத்ததூள்+எண்ணெயை ஊறுகாயில் போட்டு நன்கு கலக்கவும்.

*இப்போ சுவையான ஊறுகாய் தயார்.
Monday 16 March 2009 | By: Menaga Sathia

வாழைப்பூ முருங்கைக்கீரை துவட்டல்


தே.பொருட்கள்:

சிறிய வாழைப்பூ - 1
முருங்கைக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1 சிறியது
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்

தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு = 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
* வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
*முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி வைக்கவும்.
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
*வதங்கியதும் வாழைப்பூவை போட்டு உப்பு + 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
*முக்கால் பதம் பூ வெந்ததும் கீரையைப் போடவும்.மூடகூடாது,மூடினால் கீரை கருத்துவிடும்.
*தண்ணீர் வற்றி நன்கு வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
Saturday 14 March 2009 | By: Menaga Sathia

கண்கள் பராமரிப்பு

கண்ணில் போடும் மேக்கப்பை படுக்கச் செல்லும் முன் கலைத்து விடவேண்டும்.

நம் உடலின் மெல்லிய பாகம் கண்கள் தான்,அதனால் கண்களைக் கழுவும் போது கண்களைச் சுற்றிய பகுதிகளை அழுத்தி தேய்க்காமல் மெதுவாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.அழுத்தித் தேய்த்தால் அதிக சுருக்கங்கள் விழும்.

கண்ணுக்கு தரமான கண்மையைத் தான் பயன்படுத்த வேண்டும்.

கருவளையத்தை போக்க உருளைக்கிழங்கு சாறு - 1/2 டீஸ்பூன்+எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன் இந்த இரண்டையும் நன்கு கலந்து பஞ்சில் ஒற்றி அதை கண் இமைகளின் பேல் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

பாதாம் எண்ணெய் - 1/2டீஸ்பூன்+எலுமிச்சைசாறு - 1/2 டீஸ்பூன் இவர்றை நன்கு கலந்து பின் கண்களைச் சுற்றி மிருதுவாகத் தடவவும்.15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவினால் கருவளையம் போகும்.

கண்கள் உப்பியிருந்தால் குளிரூட்டப்பட்ட பாலில் 2காட்டன் பஞ்சுகளை நனைத்து கண் இமைகளின் மேல் 10நிமிடம் வைக்கலாம்.

வெண்டைக்காய் பொரியல்

தே.பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
தேங்காய் துருவல் - 1/4 கப்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு = 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
வெங்காயம்+பச்சைமிளகாய்+வெண்டைக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடையில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள் பொருட்களை தாளித்து வெங்காயம்+ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

வதங்கியபின் வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.நடுவில் சிறிது எலுமிச்சை சாறு + எண்ணெய் சேர்த்து வதக்கவும்.

எலுமிச்சை சாறு சேர்ப்பதால் எண்ணெய் அதிகம் செலவாகாது.தண்ணீர் சேர்த்து வதக்க கூடாது.

வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் உப்பு+தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

இந்த வெண்டைக்காய் பொரியல் புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்.

பி.கு எலுமிச்சை சாறுக்கு பதில் புளிசாறு அல்லது தயிர் சேர்த்தும் செய்யலாம்.
Saturday 7 March 2009 | By: Menaga Sathia

பொன்னாங்கன்னிக் கீரைப் பருப்பு கடைசல்

தே.பொருட்கள் :
பாசிப் பருப்பு - 1/2 கப்
பொன்னாங்கன்னிக் கீரை - சிறு கட்டு
பூண்டு - 5 பல்
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1
உப்பு -தேவைக்கேற்ப


தாளிக்க :
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
மோர் மிளகாய் - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை :

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
* அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் போட்டு வேக விடவும்.
*பருப்பு முக்கால் பாகம் வெந்ததும் கீரையைப் போட்டு 10 நிமிடம் வேகவிடவும்.கீரை வேகும் போது மூடக்கூடாது,மூடினால் கருத்துப் போய்விடும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளிக்கவும்.
*ஆறியதும் கீரையுடன் தாளித்தவைகளையும் கொட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
*இப்போழுது சுவையான கீரைக் கடைசல் தயார்.








வாழைப்பூ தொக்கு



தே.பொருட்கள்:
நறுக்கிய வாழைப்பூ துண்டுகள் - 1 கப்
மாங்காய் - 1/4 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது.
காய்ந்த மிளகாய் - 5


செய்முறை :
* நறுக்கிய வாழைப்பூ துண்டுகளை வேகவைத்து ,நீரை வடித்துக் கொள்ளவும்.
* இத்துடன் மாங்காய்,காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து அரைக்கவும்.
*வெந்தயத்தை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடிக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயத்தூள்,வெந்தயப்பொடி சேர்த்து தாளிக்கவும்.
* இதனுடன் அரைத்த விழுது சேர்த்துக் கிளறி கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
*நல்ல ருசியாக இருக்கும் இந்தத் தொக்கு.


பி.கு: மாங்காய்க்கு பதில் புளி சேர்த்து அரைக்கலாம்.
Sunday 1 March 2009 | By: Menaga Sathia

பட்டுப்புடவை டிப்ஸ்



.பட்டுப்புடவையை அட்டைப்பெட்டியில் வைக்கக்கூடாது.மென்னையான துணிப்பையில் வைக்கவும்.


தரமான லிக்விட் சோப் கொண்டு துவைக்கவும்.நீண்ட நேரம் ஊறவைப்பதோ,அடித்துத் துவைப்பதோ கூடாது.



புதிதாக வாங்கும் பட்டுப்புடவையை 6மாதத்துக்குள் துவைத்து விடணும்.அதிலிருக்கும் கஞ்சி நீக்கப்படாமலிருந்தால் துணிக்குத்தான் பாதிப்பு.


அழுக்கோ,கறையோ உள்ள இடங்களை கைகளாலேயே மென்மையாகத் தேய்க்கவும்.


சுத்தமான நீரில் அலசவும்.2 தண்ணீரில் அலசுவது அவசியம்.



முறுக்கிப் பிழியாமல் இலேசாகக் கொசுவி உதறவும்.முறுக்கிப் பிழிந்தால் இழை இத்துப் போகும்.
நிழலில் காற்றாட காயவிடவும்.



பார்டர் கீழே வருவது போல காயவிடுவது உத்தமம்.
வாளியில் 2,3 புடவைகளை ஒரே சமயத்தில் நனைக்க கூடாது.ஏதாவது ஒரு புடவையின் சாயம் மற்றோரு புடவைகளில் கலர் ஒட்டிக் கொள்ளும்.அப்புறம் புடவை வேஸ்ட் ஆகிடும்.



பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு வெளியே போய் வந்தால்,முதல் வேலையாக காற்றாட ஆறபோட்டு,வியர்வை வாடை போனதும் அயர்ன் செய்து வைக்கவும்.



பட்டுப்புடவையை பயன்படுத்தாமலே வைத்திருந்தால் அதன் ஆயுசு கம்மியாகிடும்.அடிக்கடி கட்டி துவைத்து பராமரிக்கப்படும் புடவைதான் நீண்டகாலம் உழைக்கும்.



பட்டுப்புடவையை இரும்பு பீரோவில் வைக்க நேர்ந்தால் மெல்லிய பருத்தி துணியில் சுற்றி வைக்கவும்.



பட்டுப்புடவையை அடிக்கடி உபயோக்காவிட்டாலும் அவ்வப்போது எடுத்து பிரித்து மாற்றி மடிக்கவேண்டும்.



பட்டுப்புடவையை அயர்ன் செய்யும் போது புடவையைத் திருப்பி வைத்து மிதமான சூட்டில் அயர்ன் செய்ய வேண்டும்.



ஒரு பக்கெட் நீரில் வேப்பிலைசாறு சில சொட்டுகள் போட்டு பட்டுப்புடவையை அலசினால் பூச்சி அரிக்காது.



பட்டுப்புடவையில் ஒரு வசம்பு வைத்தால் பூச்சி அரிக்காது.



பட்டுப்புடவையில் நேரடியாகப் படும்படி செண்டோ வாசனை திரவியமோ பயன்படுத்தக்கூடாது.இதனால் கறைப்படிந்து எளிதில் மங்கும்.



பட்டுப்புடவையை முதல்முறையாக அலசும்போது உடல் தனியாகவும்,பார்டர் தனியாகவும் அலச வேண்டும்.

01 09 10